ரெயிலில் அடிபட்டு பெண் பலி தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்த குழந்தையின் தாயா?

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் இறந்துகிடந்தார். அவர், ஏற்கனவே தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்த குழந்தையின் தாயா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-29 17:40 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் இறந்துகிடந்தார். அவர், ஏற்கனவே தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்த குழந்தையின் தாயா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் ஆண் குழந்தை வீச்சு

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டாவது பிளாட்பாரத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் பரவுனி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8 மணியளவில் 2-வது பிளாட்பாரத்தில் நின்று சென்றது. அதன் பிறகு அந்த வழித்தடத்தில் இரவு 10 மணி வரை எந்த ரெயிலும் செல்லவில்லை.

இந்நிலையில் ஜோலார்பேட்டை- சென்னை மார்க்கத்தில் 2-வது பிளாட்பாத்தி தண்டவாளங்களுக்கு இடையில் சுமார் ஒரு வயது உடைய ஆண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு சுமார் 11 மணியளவில் காவனூர்- லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

குழந்தையின் தாயா?

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரெயிலில் அடிப்பட்டு இறந்த பெண், ஏற்கனவே தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்த குழந்தையின் தாயா? குழந்தையை வீசிவிட்டு ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை ரெயிலில் தனது சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் போது வழியில் இறந்ததால் குழந்தையை எப்படி எடுத்து செல்வது என நினைத்து வழியில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்