மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?

அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான பொருளாக இன்று மருந்துகள் மாறிவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுப்பொருட்களுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டில் மருந்தும் மறக்காமல் இடம்பிடித்து கொள்கிறது.

Update: 2023-04-02 18:43 GMT

மூத்த குடிமக்கள்

இந்தநிலையில், அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் கடந்த 1-ந்தேதி முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர்கள் மூத்த குடிமக்கள் தான். காரணம் நிறையப் பேர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருபவர்களாகவும் தான் இருக்கின்றனர். வயதானாலே கூடவே இணை நோய்களும் வந்து விடுகின்றன.

அதுமட்டுமா? கொரோனா பரவிய காலத்தில் முதியவர்களுக்கு குறிப்பாக ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டு விட்டன. அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமானவரி விலக்கு சலுகையும் கடந்த 1-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரத்து, வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைப்பு இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்கு பாதகமாக நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

சலுகைகள் பறிப்பு

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன்:- அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் 12 சதவீதம் வரை உயருவது எங்களை போன்ற முதியவர்களை மிகவும் பாதிப்படைய செய்யும். ஓய்வூதியர்கள், முதியவர்கள் பலர் ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் உள்பட பிற நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே ஓய்வூதியர்களுக்கான சலுகைகள் பல பறிக்கப்பட்டு விட்டன. வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருகிற எங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். வயதானவர்கள் பலரை வீடுகளில் சரியாக கவனிப்பதில்லை. பலர் முதியோர் இல்லங்களில் இருந்து வருவது தெரிந்ததே. இருந்தாலும் ஒரு சிலர் தங்களது குடும்ப பொறுப்பு உணர்ந்து மகன், மகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வயதான காலத்திலும் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வூதியம் பெரும்பாலும் மருத்துவ செலவுக்கு அதிகம் செலவிடப்பட வேண்டி உள்ளது. இதனால் மருந்து விலை உயர்வை குறைக்க வேண்டும். முதியோர்களுக்கு ரெயில் பயணத்தில் வழங்கப்பட்ட கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமான வரி விலக்கு சலுகையும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படுவதில் பிடித்தம் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தவிர்க்க வேண்டும்.

மருந்து விலையை குறைக்க வேண்டும்

குளத்தூரை சேர்ந்த மூதாட்டி காமாட்சி:- நானும், எனது கணவரும் டீக்கடை நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவ்வளவு விலைவாசி உயர்வு இல்லை. உணவு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் எதிர்க்கால சேமிப்பு பற்றி நினைக்கவில்லை. வயதான காலத்தில் கடையை நடத்த முடியாமல் வீட்டுக்குள் இருக்கிறோம். வயதானதால் நோய்களும் கூடவே வந்து விட்டன. மருந்து மாத்திரைகள் தற்போது விலை அதிகரித்து வருவதால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே அதனை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் செலவு ஏற்படும்

புதுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை தனலட்சுமி:- வயதானவர்கள் பெரும்பாலும் நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் மூலம் தான் கவனித்து வருகின்றனர். சாப்பாட்டை போல் மருந்தும் ஒரு வழக்கமாகி விட்டது. எனக்கும், எனது கணவருக்கும் மாதம் மருத்துவ செலவே ஒரு தொகை வந்து விடும். எனது கணவரும் மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான். மருந்துகள் விலை உயர்வால் இனி கூடுதல் செலவு ஏற்படும். மூத்த குடிமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை மத்திய, மாநில அரசுகள் சிலவற்றை நிறுத்தி விட்டன. அதனை மீண்டும் வழங்க வேண்டும்.

ரெயில்களில் கட்டண சலுகை

அரிமளம் பேரூராட்சியை சேர்ந்த மீனாம்பாள்:- எனக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் உடல் வலி, கை, கால் வலி ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரை எனது சக்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வரை மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டியுள்ளது. மேலும் உறவினர் வீட்டு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. இப்போது நகர பஸ்களில் அனைத்து பெண்களுக்கும் இலவசம் என அரச அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது எனினும் இதில் சில மாற்றங்களை செய்து உண்மையிலேயே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வயது முதிந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அளித்தால் நன்றாக இருக்கும். மேலும் தமிழக அரசு பஸ்களில் வயதானவர்களுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்களில் சிறப்பு சலுகை அளிக்க வேண்டும். அவ்வாறு சிறப்பு சலுகை அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் ரெயில் பயணத்தில் முதியோர்களுக்கு கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு

புதுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை சரஸ்வதி:- உணவே மருந்தே இருந்த காலம் கடந்து, மருந்தே உணவாக தான் தற்போதைய நிலை உள்ளது. வயதானவர்கள் பெரும்பாலும் மருந்து, மாத்திரைகளுக்கு தான் அதிகம் செலவிடுகின்றனர். மாதம் இதற்காக குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. விலைவாசி உயர்வோடு தற்போது மருந்துகளின் விலை உயர்வும் பெரும் கஷ்டத்தை கொடுக்கிறது. கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. மருந்துகள் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றைய காலத்தில் மருத்துவ செலவு அதிகமாக தான் இருக்கிறது. இதனால் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள் என்ற பெருமையோடு ரெயில்களில் கட்டண சலுகையோடு பயணம் செய்தோம். தற்போது அந்த சலுகையும் பறிக்கப்பட்டு விட்டது. ஓய்வூதியத்தில் மருத்துவ காப்பீடுக்கான பிடித்தமும் அதிகரித்து விட்டது. ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலையே பெரும் அவதிக்குள்ளாகுகிற நிலையில், எவ்வித வருமானமும் இல்லாமல் இருக்கின்ற முதியவர்கள், மூதாட்டிகள் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

முதியோர் அலைக்கழிப்பு

முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த சர்புதீன்:- மூத்த குடிமக்களில் சிலர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசின் முதியோர் திட்டத்தின் மூலம் மாதாந்திர உதவித்தொகை கிடைக்காமல் பலர் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூத்த குடிமக்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு பஸ்களில் இலவச பயணங்களும், வங்கிகள், அங்காடி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மூத்தகுடிமக்களின் மன இறுக்கத்தை குறைக்க பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும்.

அரசு மீது நம்பிக்கை

பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி:- லட்சக்கணக்கான குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்த நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வு மேலும் அனைவரையும் பாதிக்கும். முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் கருதி செயல்பட்டு வரும் நம்முடைய மாநில அரசு இந்த விலையை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு சில இடங்களில் பெற்றோர்களை வீடுகளில் கவுரவமாக வைத்து பிள்ளைகள் பார்ப்பதில்லை. இதனால் மருந்து மாத்திரைகளை நம்பியே முதியவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு நலன் புரியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

800 வகையான மருந்துகள்

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை முகவர்கள்:- இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது. இந்த நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இதனை ஏற்று அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை இந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவை பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்