பயிற்சி பெண் டாக்டர் கொலை: தமிழகத்தில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்

கொல்கத்தா பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகத்தில் டாக்டர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Update: 2024-08-16 09:32 GMT

சென்னை,

கொல்கத்தா பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகத்தில் டாக்டர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க காவல்துறை இந்த வழக்கை விசாரித்த நிலையில் சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் பயிற்சி டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பேரணியில் ஈடுபட்டனர். நாகை மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர். அதுபோல பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி சேலத்தில் டாக்டர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளில் பெண் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் கூறினர்.



இதனிடையே, தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள டாக்டர்கள் போராட்டத்தால் பணி பாதிக்க கூடாது என்றும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகத்தில் டாக்டர்கள் போராட்டம் அறிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்