பெரியகுளம் சகோதரிகள் உள்பட பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி

பெரியகுளம் சகோதரிகள் உள்பட பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த மருந்து விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-08 17:05 GMT

கோழிப்பண்ணை உரிமையாளர்

பெரியகுளம் தென்கரை கிண்ணிமங்கலம் தெருவை சேர்ந்தவர் லோகேந்திரன் (வயது 28). கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது அக்காள்கள் ஜீவா, நித்தியவேணி ஆகிய இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜீவாவுடன் தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றேன். அப்போது பழனிசெட்டிபட்டி லட்சுமிநகரை சேர்ந்த செண்பகபாண்டியன் (35) அங்கு வந்தார். அவரை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவரிடம் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்ய வந்துள்ள விவரத்தை கூறினேன்.

அரசு அலுவலகங்களில் வேலை

ஒரு வாரத்துக்கு பிறகு செண்பகபாண்டியனும், பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த கவுதம் என்பவரும் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் பலருக்கு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், ஒரு நபருக்கு ரூ.6 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறினர். அதை நம்பி நான், எனது அக்காள் ஜீவாவுக்கு பெரியகுளம் கருவூலத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கும், நித்தியவேணிக்கு பெரியகுளம் தபால் அலுவலகத்தில் இளநிலை கணக்காளர் வேலையும், உறவினர் செந்தாமரை, தீபா ஆகியோருக்கு மதுரை மாநகராட்சியில் உதவியாளர் பணிக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் கொடுத்தேன்.

பணத்தை வாங்கிக் கொண்டு பணி நியமன உத்தரவு கொடுத்தனர். ஆனால், கவுதமும், மற்றொரு பெண்ணும் பணியில் சேரவிடாமல் தாமதம் செய்தனர். இதனால், விசாரித்ததில் அவர்கள் கொடுத்தது போலியான பணி நியமன உத்தரவு என தெரியவந்தது. இதனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.12 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு ரூ.6 லட்சத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கைது

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த மோசடி குறித்து செண்பகபாண்டியன், கவுதம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், செண்பகபாண்டியனை போலீசார் இன்று கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கைதான செண்பக பாண்டியன் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அவர் உள்ளிட்ட நபர்கள் மேலும் பலரிடம் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது சென்னையை சேர்ந்த ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 2 பேரும் புகார் கொடுத்துள்ளனர். அந்த 3 பேரிடம் சுமார் ரூ.24 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். இதுவரை ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்