உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி எப்போது? - அமைச்சர் எ.வ.வேலு பதில்

75 ஆண்டுகள் கடந்து பவள விழா கொண்டாடுகிற இயக்கமாக திமுக உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2024-09-20 05:47 GMT

வேலூர்,

வேலூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவர் முடிவு செய்து அறிவித்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம். கீழ்மட்ட தொண்டர்கள் முதல் கேபினட்டில் உள்ள அவைமுன்னவர் துரைமுருகன் உள்பட அனைவரும் அதனை உளமாற வரவேற்போம்.

திமுக தலைவர் என்ன சொல்கிறாரோ அதை 100 சதவீதம் ஏற்று கொள்கிற ஒரு இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அதனால்தான் 75 ஆண்டுகள் கடந்து பவள விழா கொண்டாடுகிற இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்தை பொறுத்தவரைக்கும் தலைமை என்ன சொல்கிறதோ அதை அனைத்து தொண்டர்களும் ஏற்று கொள்வார்கள்.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் தரமாக உள்ளது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி பாராட்டினார். தமிழகத்தில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 30-ந் தேதி மத்திய அரசின் சார்பில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நான் கலந்து கொள்ள உள்ளேன். அப்போது தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை கடிதம் மூலம் மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்