திமுக அரசின் பொய் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள அதிமுக எப்போதும் தயார்: எடப்பாடி பழனிசாமி

சர்வாதிகார ஆட்சி நடத்தும் திமுக மக்களிடம் பதில் சொல்லும் நாள் வெகும் தூரத்தில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-09-20 06:45 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் திமுக அரசு, தனது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

திமுக அரசின் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, முதல்-அமைச்சரின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் புதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், 4 கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை என்று திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டிருக்கிறார் திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுபோன்ற தகிடுதத்தங்களால் அதிமுகவை முடக்கிவிடலாம்; எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம்; போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

சகோதரர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர். திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன். அதிமுக செயல் வீரர்களை பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கும் திமுக அரசின் சவாலை சட்டப்படி எதிர்கொள்ள எப்போதும் தயார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்