வெண்ணந்தூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-23 13:46 GMT

நாமக்கல்:

நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்

நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள் நூல்களை மாலையாக அணிவித்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கடந்த 6 மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை 100 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.

கூட்டுறவு நூற்பாலை

இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 60 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ரூ.18 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பருத்தி அதிக அளவில் உற்பத்தி ஆவதால், இங்கு கூட்டுறவு நூற்பாலை அமைக்க வேண்டும். நூல் வங்கி உருவாக்கி, நெசவாளர்களுக்கு சீரான விலையில் நூல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

6 ஆயிரம் விசைத்தறிகள்

இந்த போராட்டம் குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மாதேஸ்வரன் கூறியதாவது:- நூல் விலை உயர்வை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மத்திய அரசு பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாமல், வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடாது. பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்த போராட்டத்தால் வெண்ணந்தூர் பகுதியில் 6 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு உள்ளனர். நூல் விலையை குறைத்தால் மட்டுமே நெசவு செய்ய முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று வெண்ணந்தூர் பகுதியில் வேட்டி மற்றும் துண்டு உற்பத்தி சுமார் ரூ.1 கோடிக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்