தீக்குளிக்க முயன்ற பெண் போலீஸ் சஸ்பெண்டு
சிவகாசியில் தீக்குளிக்க முயன்ற பெண் போலீசை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
சிவகாசி,
சிவகாசியில் தீக்குளிக்க முயன்ற பெண் போலீசை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் செல்லம்மாள் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபகுமார் கூறிய அலுவல்பணியை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சுபகுமார், பெண் போலீஸ் செல்லம்மாள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த போது இதற்கு ஆட்சேபனை தெரிவித்த செல்லம்மாள், இதுகுறித்து தனது தரப்பு விளக்கத்தை கொடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சுபகுமாரை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் தான் கொண்டு சென்ற மண்எண்ணைய்யை செல்லம்மாள் தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
தனி தனியாக விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் செல்லம்மாளை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் சம்பவம் குறித்த முழுவிவரங்களை தனி பிரிவு போலீசார் மூலம் தெரிந்து கொண்டது.
இந்தநிலையில் சிவகாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தனது அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் சுபகுமார், பெண் போலீஸ் செல்லம்மாள் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து தனி தனியாக விசாரணை நடத்தினார். இதுகுறித்த அறிக்கை மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெண் போலீஸ் சஸ்பெண்டு
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் அளித்த அறிக்கையை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி பெண் போலீஸ் செல்லம்மாளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
பெண் போலீஸ் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.