போதைக்கு அடிமையாகிவிட்டால் வாழ்வு சீரழிந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-09-19 20:57 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

கல்வி என்பது அழிக்க முடியாத செல்வம். விவசாயத்தை படிக்கின்ற மாணவ, மாணவிகள் கடினமாக படித்தால் தான் தேர்ச்சி பெற முடியும். உணவு உற்பத்தியை பெருக்க வேண்டுமானால் நவீன, விஞ்ஞான முறையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு உதவி செய்தோம். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது அதிகமாக பால் கறக்கும் கலப்பின பசுக்களை உருவாக்க சேலம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் கட்டி இரண்டு வருடம் ஆகியும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக திறக்கப்படாமல் உள்ளது.கிராமப்புற மாணவர்களும் டாக்டர்களாக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தோம். இதனால் 3,150 பேர் இன்று டாக்டராக படித்துள்ளார்கள். வேளாண்மை உற்பத்தி, தொழில் வளம் பெருக்குதல், வேலை வாய்ப்பு ஆகியவை முக்கியமானது. அவற்றை அ.தி.மு.க அரசு சிறப்பாக கையாண்டது. உழைத்தால் வெற்றி பெற்று சாதிக்கலாம்.

இன்றைய சூழலில் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. போதைக்கு அடிமையாகி விட்டால் நமது வாழ்வு சீரழிந்து விடும். எந்த சூழ்நிலையிலும் நல்ல நிலையில் இருந்து மாறாமல் வாழ வேண்டும். தவறான பாதையில் செல்லக்கூடாது. படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கவில்லை என்று இருக்கக்கூடாது. படித்த தொழிலில் கவனம் செலுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டும் என்று நான் எனது ஆட்சியில் திட்டமிட்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு வரும் சூழலில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டத்தினை கொண்டு வருவேன். நல்ல முறையில் படித்து சிறந்த வேளாண் தொழில்நுட்ப அறிஞர்களாக, ஆராய்ச்சியாளர்களாக நீங்கள் உருவாக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்