புதுஆற்றில் பிணமாக கிடந்த வேன் டிரைவர்
புதுஆற்றில் பிணமாக கிடந்த வேன் டிரைவர்
தஞ்சை புதுஆற்றில் பிணமாக கிடந்த வேன் டிரைவர் எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பிணம்
தஞ்சை எம்.கே.மூப்பனார் ரோடு புதுஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. நேற்றுமாலை புதுஆற்றில் ஒரு கை மற்றும் முகத்தின் ஒரு பகுதி தெரிந்த நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். புதுஆற்றுப்பாலத்தில் நடந்து சென்ற சிலர் புதுஆற்றில் வாலிபர் பிணம் கிடந்ததை பார்த்தனர். உடனே அவர்கள் இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்வழுதி, காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் புதுஆற்றில் பிணமாக கிடந்த அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரிந்தது
பின்னர் புதுஆற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர், தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது38) என்பதும், வேன் டிரைவராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் புதுஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.