சென்னை பல்லாவரம் அருகே பயங்கரம்: மனைவி, மகள், மகனை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துக்கொன்ற என்ஜினீயர்

மனைவி, மகள், மகனை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்ற என்ஜினீயர், அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-29 00:50 GMT

தாம்பரம்,

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர், இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 41). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தரமணியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி காயத்ரி(39). வீட்டின் அருகேயுள்ள வடிவேல் தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

இவர்களுடைய மகள் நித்யஸ்ரீ(13), மகன் ரித்திஷ்(8). இவர்களில் நித்யஸ்ரீ, குன்றத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், ரித்திஷ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று காலை காயத்ரியின் தந்தை, திருப்பதி லட்டு கொடுப்பதற்காக மகள் வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தப்பட்டு இருந்ததால் மகளை கூப்பிட்டார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்து வந்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் வெறுமனே சாத்திய நிலையிலேயே இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பிரகாஷ், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் என 4 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகள், மருமகன், பேரன், பேத்தியின் உடல்களை பார்த்து காயத்ரியின் தந்தை கதறி அழுதார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரகாஷ் உள்பட 4 பேரும் வீட்டில் பிணமாக கிடந்தனர். வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது.

பிரகாஷ் உடல் அருகில் பேட்டரியால் தானாக இயக்கும் மரம் அறுக்கும் ரம்பம் இருந்தது. எனவே பிரகாஷ், மரம் அறுக்கும் ரம்பத்தால் முதலில் தனது குழந்தைகளையும், பின்னர் தனது மனைவியையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து உள்ளார். அதன்பிறகு தானும் அதே ரம்பத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கொலையான 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு, வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தற்கொலைக்கு முன்னதாக பிரகாஷ், 2 கடிதங்களை எழுதி உள்ளார். ஒன்றை சுவரில் ஒட்டி வைத்துள்ளார். மற்றொன்றை நோட்டில் வைத்து இருந்தார். அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில், "எங்கள் முடிவு மற்றவர்களுக்கு கவலையாக இருந்தாலும், இது நானும், என் மனைவியும் இணைந்து எடுத்த முடிவு. இந்த செயலுக்கு யாரும் பொறுப்பல்ல" என ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்.

கடன் தொல்லையால் பிரகாஷ், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரகாஷ் மற்றும் காயத்ரி இருவரும் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், ஆனால் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. கடனை திருப்பி செலுத்துவதற்காக பலரிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டியதால் அவர்கள் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் பிரகாஷ் வீட்டை சுற்றி ஏராளமானோர் கூடினர். காயத்ரி, பா.ஜ.க. பொழிச்சலூர் மண்டல மகளிரணி செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த சோக சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஏராளமான பா.ஜ.க.வினரும் அங்கு குவிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்