ஜார்கண்ட் மாநில முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

தமிழக மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-11-04 13:30 GMT

சென்னை,

ஜார்கண்ட் மாநில முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.  மருத்துவ மாணவர் மதன் குடும்பத்தினருக்கு  மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளர். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் மதன்குமார்(28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்தார். இந்தநிலையில் மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கி இருந்த விடுதியின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது உடல் விமான மூலம் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் மதன்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரமான சூழ்நிலையில் மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களை வலியுறுத்தி உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்