மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையை தமிழ் இலக்கியங்கள் கொடுக்கின்றன- கருத்தரங்கில் தகவல்

மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையை தமிழ் இலக்கியங்கள் கொடுக்கின்றன என்ற தகவல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-09-07 22:09 GMT


மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையை தமிழ் இலக்கியங்கள் கொடுக்கின்றன என்ற தகவல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்கூடல்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவை இணைந்து தமிழ்கூடல் என்ற நிகழ்ச்சியை, உலக தமிழ் சங்க வளாகத்தில் நேற்று மாலை நடத்தியது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் (பொ) அவ்வை அருள் தலைமை தாங்கினார். புதுச்சேரி கவிஞர் மனு மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு இருக்கும் சமூகச்சூழல் மானுடத்தின் மீதான கேள்வியை எழுப்புகிறது. மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இத்தலைப்பை் தேர்வு செய்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப வாழ்ந்தவர்கள் தான் கடையேழு வள்ளல்கள். முல்லைக்குத் தேர் கொடுத்தது, மயிலுக்குப் போர்வை கொடுத்தது ஆகியவை மனிதத்தின் உச்சம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் மூலம் ஒட்டு மொத்த மானிடத்துக்குமான தத்துவத்தைத் தமிழ் இலக்கியம் பேசுகிறது. மானுடம் என்பது மனிதகுலத்தை முழுமையாகப் பேசும் உணர்வு. தமிழ் இலக்கியங்கள் மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

ஈரம்-அறம்

மானுடம் வெல்லும் என்ற சொல்லாட்சியைக் கம்பர் முதன்முதலில் பயன்படுத்துகிறார். மனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதை இலக்கியங்கள் தொடர்ந்து பேசுகின்றன. சங்க இலக்கியத்தில் பெருஞ்சித்திரனார் ஒரு பாடலில் செல்வத்தைத் தனக்கென வைத்துக்கொள்ளாது பாணன், பாடினி, விறலி என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கவேண்டும் என்பதைப் பதிவு செய்கிறார். கருணை, ஈரம், அறம் ஆகியவை தான் மானுடம் வெல்லும் என்பதற்கான நம்பிக்கை. எனவே அந்த பண்புகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்