திருச்செந்தூர்-நெல்லை இடையே அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி

திருச்செந்தூர்-நெல்லை அரசு பஸ்களில் திடீரென்று ரூ.6 அதிகரித்து ரூ.56 கட்டணம் உயர்த்தி வசூலிப்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2024-07-02 05:01 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலக புகழ் பெற்ற முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு விடுமுறை நாட்கள், திருவிழாகாலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், கொரோனா காலத்திற்கு பிறகு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்பு திருவிழா காலங்கள், சனி, ஞாயிறு கிழமைகளில் ஓரளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது தினமும் இரவு, பகல் எந்நேரமும் பக்தர்கள் கூட்டம் கோவில், கடற்கரை பகுதிகளில் அலைமோதுகிறது.

அதேபோல் திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திருச்செந்தூர்-நெல்லை மார்க்க பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். நெல்லை-திருச்செந்தூர் இடையே போதிய ரெயில் வசதி இல்லாததால், வெளியூர் பக்தர்கள் தினமும் நெல்லை மார்க்கமாக திருச்செந்தூருக்கு பஸ்களில் அதிகளவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர்-நெல்லை இடையே அரசு பஸ்களில், அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணமான ரூ.50-ல் இருந்து திடீரென ரூ.56 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்து கழகம் சார்பிலோ, அரசு சார்பிலோ எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அரசு பஸ்களில் சப்தமின்றி இந்த கட்டண வசூல் நடக்கிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள், பாமர மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண்டக்டர்கள் கூறுகையில், அதிகாரிகள் கூறுவதை கேட்டு நாங்கள் பணியாற்றுகிறோம். பயணிகள் கேட்டால் பைபாஸ் ரைடர் என்று கூறி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு கூறுகின்றனர். இதில் எங்களுக்கு உடன்பாடு உண்டா? இல்லையா? அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து நாங்கள் கருத்து கூறமுடியாது என மறுத்து விடுகின்றனர். இதனால் பஸ்களில் கட்டண உயர்வு குறித்து சில பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் கூறுகையில்,

திருச்செந்தூர் - நெல்லை இடையே 'பிபிஆர்' என்று குறிப்பிடப்பட்டு சில பஸ்களில் மட்டும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி ரூ.56 ஆக வசூலித்து வருகிறோம். இந்த பஸ்கள் குறிப்பிட்ட ஸ்டாப்களில் மட்டும் நின்று செல்லும். அந்த பஸ்களில் மட்டும் திருச்செந்தூர்-நெல்லை செல்வதற்கும், வருவதற்கும் கட்டணம் ரூ.56 என வசூலிக்கப்படுகிறது. மற்ற பஸ்களில் வழக்கம் போல் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இது கடந்த 2 மாத காலமாக நடைமுறையில் உள்ளது, என்று கூறினார்.

ஏற்கனவே திருவிழா நாட்களில் சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் ரூ.5 கட்டணம் உயர்்த்தி வசூலிக்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. இந்த நிலையில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலை வசதி இல்லாத நிலையில், ஒரே நேர கால அவகாசத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் திடீரென எந்த அடிப்படையில் ரூ.6 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவது பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்