திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்கள் பதிவு செய்யலாம்

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்கள் பதிவு செய்யலாம்

Update: 2023-03-04 18:45 GMT

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி பெற திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவா்கள் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

11 ஆயிரம் காலிப்பணியிடம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in வெளியிடப்பட்டுள்ளது. 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.

இந்த தேர்வில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற தாட்கோ மற்றும் வரண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் இலவச பயிற்சி அளிக்கபட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

கணினி வழியான தேர்வு

காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியான தேர்வு, உடல்திறன் தேர்வு / உடல்நிலைத்தேர்வு (ஹவால்டர் பதவிக்கு மட்டும்). சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடக்கும். தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை சம்பளத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.

எனவே ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகை பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ, 04366-250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்