திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க வீரர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திகிரி
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க வீரர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடக்கழிவு மேலாண்மை மையம்
ஓசூர் அருகே அந்திவாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, விளையாடி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடை பயிற்சி சென்று வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் அருகே ஓசூர் மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் அருகே குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகும். இதனால் விளையாட்டு மைதானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
போராட்டம்
இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தின் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.