செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணாமலையும்தான்

செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணாமலையும் தான் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

Update: 2023-06-14 21:48 GMT

சிவகாசி, 

செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணாமலையும் தான் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

40 தொகுதிகளை கைப்பற்றும்

சிவகாசி பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத்தும் அண்ணாமலையால் வெற்றி பெற முடியவில்லை. அவரை செந்தில்பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.

செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணாமலையும் தான். ஓடிசா விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றும்.

எய்ம்ஸ் கல்லூரி

மதுரை எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித்ஷா கூறியது மிகப்பெரிய பொய். நானும், மதுரை எம்.பி. வெங்கடேசும் சேர்ந்து எய்ம்சை தேடினோம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை. இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பது தான் உண்மை. 2015-ல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தேவைப்பட்டால் டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பேன்.

பட்டாசு தொழில்

தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்கமாக பேசுவது போல் இதுவும் பொய்யே. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சிவகாசி மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர்கள் ரவிசங்கர், கணேசன், நியாஸ், ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்