இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்

பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-30 17:25 GMT

பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பசுமை வனப்பரப்பு

தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் பசுமை வனப்பரப்பு 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக்கொள்கையின் படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு விவசாயிகளை பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தில் தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மகாகனி, வேம்பு உள்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை, தோட்டக்கலை துறை, தேசிய ரூபன் நாற்றங்கால், மற்றும் தனியார்நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளன. அதற்கான மரக்கன்றுகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் மரங்கள் நடவு செய்வதாக இருந்தால் எக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயி இரண்டு எக்டேர் பரப்பிற்கு மரக்கன்றுகள் பெற்று பயன் பெறலாம். ஊடுபயிர் மற்றும் அடர்வு நடவு முறையில் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டேருக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு எக்டேருக்கு 360 முதல் 1000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.

மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்தபின் மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார்.

பராமரிப்பு தொகை

மேலும், நன்றாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு பராமரிப்பு தொகையாக 2-ம் ஆண்டில் இருந்து மரக்கன்று ஒன்றிற்கு ரூ.7 வீதம் 4 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்