மறைமுக ஏலத்தில் பாக்கு, தேங்காய் விற்பனை
மறைமுக ஏலத்தில் பாக்கு, தேங்காய் விற்பனை
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பாக்கு மற்றும் உரித்த தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தை சேர்ந்த 19 விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் இருந்து 112 உரித்த தேங்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். மேலும் 4 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். உரித்த தேங்காய் கிலோவிற்கு 22 ரூபாய் 30 பைசாவில் இருந்து 27 ரூபாய் 70 பைசா வரை ஏலம் சென்றது.
இதேபோன்று பாக்கு ஏலத்தில் 2 விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து 2 மூட்டை பாக்குகளை கொண்டு வந்தனர். 2 வியாபாரிகள் கலந்து கொண்டு கிலோவிற்கு பாக்கு காய்களை 350 ரூபாய்க்கும், பழ பாக்குகளை 170 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.