திருவாரூர் மாவட்டத்தில் 202 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மானியம்

திருவாரூர் மாவட்டத்தில் 202 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மானியம்

Update: 2022-08-13 18:22 GMT

தாட்கோ மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 202 பேருக்கு ரூ.1கோடியே 58 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என தலைவர் மதிவாணன் கூறினார்.

தேர்வுக்குழு நேர்காணல்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பிற்கான திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவிக்கான மாவட்ட அளவிலான தேர்வுக்குழு நேர்காணல் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தாட்கோ தலைவர் மதிவாணன் நேர்காணலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களான தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவி பெறுவதற்காக 97 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

பல்வேறு நலத்திட்டங்கள்

தமிழக முதல்-அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக குற்றங்கள் எங்கு நடந்தாலும் அவர்களுக்கு சரியான நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 30-ந் தேதி வரை 202 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மானியம் தாட்கோ மூலம் வழங்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட தனியார் வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

2,500 பேர் கடன் உதவி

கடன் உதவி திட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக இருந்ததை ரூ.3 லட்சமாக உயர்த்தியும், விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் வழங்குவதற்கு நிலம் அவசியமில்லை என்பதையும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தாட்கோ மூலம் 2,500 பேர் பல்வேறு கடன் உதவி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், தாட்கோ மேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்