மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் கொள்ளை; பெண் உள்பட 3 பேர் கைது

மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 22:09 GMT

3 பேர் கைது

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). கடந்த 12-ந்தேதி பகல் 12 மணி அளவில், இவர், கடையில் வசூல் ஆன ரூ.37½ லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக ஒரு பையில் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீஸ் விசாரணையில், திருச்சி வரகனேரி மற்றும் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தாலிச்சங்கிலி திருட்டு

*புள்ளம்பாடி அருகே சரடமங்கலம் கிராமத்தில் தெற்குத்தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(39). இவரது மனைவி சுகன்யா(27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது 6½ பவுன் தாலிச்சங்கிலியை அலமாரியில் கழற்றி வைத்துவிட்டு தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது, அது திருட்டு போனது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காணக்கிளியநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

*திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜன் நகரை சேர்ந்த நாகராஜன் (74), சுங்கத்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் சம்பவத்தன்று கும்பக்குடி அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்