விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 20:27 GMT


விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

விருதுநகர் புதிய பஸ்நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகத்தால் கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு உலக வங்கி நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு 1993-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் பயன் தரவில்லை.

இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாகவோ சாத்தியப்படாவிட்டால் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை வழியாகவோ செல்ல வேண்டுமென வழிகாட்டுதல் உத்தரவு வழங்கியது.

ஆட்சி மாற்றம்

இந்த வழிகாட்டல் உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.என். நேரு புதிய பஸ் நிலையத்தை நகரின் வடபகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்றி விட்டு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனாலும் இந்த முடிவு செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது தி.மு.க. அரசு பதவி ஏற்ற உடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் பலகட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பின்பும் புதிய பஸ் நிலையம் முடக்க நிலையில் இருந்து மீளவில்லை.

வலியுறுத்தல்

இதற்கான காரணமும் தெரியவில்லை. எனவே தமிழக அரசு நகர் மக்களின் நலன் மற்றும் நகரின் முன்னேற்றம் கருதி விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்