காளியம்மன் கோவிலுக்கு சீல் வைத்ததை கண்டித்து பேரணி

வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு சீல் வைத்ததை கண்டித்து பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-12 19:03 GMT

கோவிலுக்கு சீல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த 7-ந்தேதி நடந்த திருவிழாவில் ஒரு தரப்பினரை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 8-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஒரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று கரகத்தை எடுத்து கிணற்றில் கரைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோவிலை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து கோவில் சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என கடந்த 9-ந்தேதி வீரணம்பட்டியில் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து கலெக்டர் பிரபுசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

போலீசார் தடுத்து நிறுத்தம்

இதுதொடர்பாக நேற்று காலை தரகம்பட்டியில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் மாணிக்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் சுமார் 2 ஆயிரம் பேர் கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுக்க தரகம்பட்டி கடைவீதி, பஸ் நிலையம் வழியாக பேரணியாக வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரணியாக வருவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி, அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தாரிடம் மனு

பின்னர் 10 பேரை மட்டும் கடவூர் தாசில்தார் அலுவலகத்தின் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து அவர்கள் தாசில்தார் முனிராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும், மதுபோதையில் வந்து பெண்கள் மீது உரசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு மாவட்ட ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை செய்து ஏற்கனவே உள்ள நடைமுறையில் கோவிலில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பேரணியையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்