புலிவலத்தில் தூய்மை நடைபயணம்

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புலிவலத்தில் தூய்மை நடைபயணத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-20 18:45 GMT

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புலிவலத்தில் தூய்மை நடைபயணத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூய்மை நடைபயணம்

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் முழு சுகாதாரத்தை நோக்கிய மக்களின் பயணம் குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்றனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

மரங்களை வளர்க்க வேண்டும்

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமங்களையும் தூய்மையானதாக வைத்து கொள்ள வேண்டும். கிராமங்களில் கழிப்பறை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி பொருட்கள் தவிர்த்தல் குறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குப்பைகளை தரம் பிரித்து தூய்மைகாவலர்களிடம் வழங்க வேண்டும். வீட்டிலும், பொது இடங்களிலும் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்தவேண்டும். முழு சுகாதாரத்துடன் அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நடைபயணமானது புலிவலம் அரசு மேல் நிலைப்பள்ளி வாசலில் இருந்து தொடங்கி ஊராட்சிபகுதிக்குட்பட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, பாஸ்கரன், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காளிமுத்து, சித்ராகுருநாதன், ஜெயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலர் தங்கதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் தவுலத் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்