கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா தொடங்கியது

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா ேநற்று கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.

Update: 2023-09-18 18:15 GMT

கொடியேற்றம்

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கோவில் பட்டாச்சாரியார்கள் கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள், கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

26-ந்தேதி தேரோட்டம்

திருவிழாவையொட்டி சுவாமி 20-ந்தேதி வெள்ளி அனுமந்த வாகனத்திலும், 21-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 25-ந்தேதி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வருகிறார். 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 26-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

29-ந்தேதி சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், அக்டோபர் 2-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 4-ந்தேதி வெள்ளி அனுமந்த வாகனத்திலும், 5-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 6-ந்தேதி முத்து பல்லக்கிலும், 8-ந்தேதி ஆளும் பல்லக்கிலும் வலம் வருகிறார். 9-ந்தேதி வண்ணப்பூக்களால் வேள்வி நடைபெறுகிறது.

சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு

வருகிற 23-ந்தேதி முதல் சனிக்கிழமை, 30-ந்தேதி 2-வது சனிக்கிழமை, அக்டோபர் 7-ந்தேதி 3-வது சனிக்கிழமை, 14-ந்தேதி 4-வது சனிக்கிழமைஆகிய தேதிகளில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெயதேவி, நந்தகுமார், பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள், பக்தர்கள், கோவில் ஊழியர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்