ஊட்டியில் புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு தின விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-18 19:00 GMT

ஊட்டி

தமிழ்நாடு தின விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

புகைப்பட கண்காட்சி

நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழ்நாடு தினத்தையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி 'தமிழ்நாடு நாள் விழா'வாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் முக்கியத்துவம் மற்றும் உழவர் நலன் காக்கும் அரசு, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சோதனையிலும் சாதனை, கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மழை பாதிப்பு துயர்நீக்க நடவடிக்கைகள் போன்றவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

குறும்படம்

இந்த கண்காட்சி இன்று (நேற்று) முதல் வருகிற 23-ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் இதை கண்டுகளிக்கும் வகையில் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு தினம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இதே போல் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் குறும்படம் ஒளிபரப்பபடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு பேரணி

முன்னதாக தமிழ்நாடு தின விழாவையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 4 பள்ளிகளை சார்ந்த 400 மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊட்டி ரெயில் நிலையத்தில் தொடங்கி அப்பர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தை சென்றடைந்தது. தமிழ் வாழ்க, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்