டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்

டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்

Update: 2022-07-16 19:35 GMT

அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் 200 டன் வரை அரவை பாதிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிமுறையை கொண்டு வந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1-ந்தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி மாற்றம், வரி விலக்கு, புதிய பொருட்களுக்கு வரிவிதிப்பு போன்றவற்றை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு அரிசி, கோதுமை, பருப்பு, எல்.இ.டி. விளக்கு, உள்பட பல பொருட்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. பல பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியில் இருந்து கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

அரிசிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் அரிசி அரவை ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான அரிசி ஆலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளை அரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அரவை பாதிப்பு

அதனால் அந்த அரவை ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இதர அரவை ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன்படி 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன. இதன் காரணமாக 200 டன் வரை அரவையும் பாதிக்கப்பட்டது. இதேபோல் அரிசி வியாபாரிகளும் ஆங்காங்கே கடைகளை அடைத்தனர்.

இது குறித்து டெல்டா மாவட்ட நெல், அரிசி வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பிச்சைமொய்தீன் கூறுகையில், அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால் அரிசி விலை உயரும். இதனால் ஏழை, எளிய மக்கள் தான் பெரிதும் பாதிப்படைவார்கள். ஏற்கனவே கொரோனாவால் அரிசி ஆலைகள், அரிசி வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். எனவே அரசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஆலைகளுக்கு அறிவுறுத்தல்

இதை வலியுறுத்தி அரிசி ஆலைகள், வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 200 அரிசி ஆலைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

இதில் பெரும்பாலான அரிசி ஆலைகள், அரசுக்கு அரைத்து கொடுப்பதால் அந்த பணிகள் பாதிக்கப்படாமல் ஆலைகள் இயங்கின. 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்