கிருஷ்ணகிரி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

முதல் போக பாசனத்துக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

Update: 2024-07-04 16:37 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திற்கான பாசன நீர் வழங்கு விதிகளின்படி, நீர்த்தேக்கத்தில் குறைந்த அளவாக 1,260 மில்லியன் கன அடி நீர் இருந்தால் (பொதுவாக குறிப்பிட்டுள்ளதால் பயன்படுத்த முடியாத இருப்பு நீரை பிரிக்காமல்) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி முடிய 150 நாட்களுக்கு இரு பிரதான கால்வாய்களிலும் தண்ணீர் வழங்க வரையறுக்கப்பட்ட விதிமுறை வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அணையில் 1,225.78 மில்லியன் கன அடி (பயன்படுத்தப்படாத இருப்பு நீர் நீங்கலாக) தண்ணீர் உள்ளது. அணைக்கு கடந்த 15 நாட்களாக 338.55 மில்லியன் கன அடி அல்லது நாள் ஒன்றுக்கு 22.57 மில்லியன் கன அடி (தோராயமாக) நீர் வந்த வண்ணமுள்ளதாலும், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் மற்றும் எதிர்வரும் பருவமழையினால் பெறப்படும் நீரினையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு நாளை முதல் நவம்பர் 11-ந்தேதி வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டம் இடதுபுற கால்வாய் (பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி, மாரிசெட்டிஹள்ளி, பாலேகுளி, நாகோஜனஹள்ளி) வலதுபுற கால்வாய் (கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஹள்ளி, காவேரிப்பட்டிணம், எர்ரஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், பையூர், ஜனப்பரஅள்ளி) உள்ள 9,012 ஏக்கர் பாசனபரப்புகள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்