தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு

சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.

Update: 2024-07-07 05:51 GMT

சென்னை,

கொலையான ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி இன்று காலை 9.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். மாயாவதி வருகையை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூருக்கு மாயாவதி வந்தடைந்தார். அங்கு படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார்.

உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தனது வீட்டின் அருகிலே ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். சட்டத்தை நமது கையில் எடுக்க வேண்டாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்