நவராத்திரி விழா தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவராத்திரி விழா தொடங்கியது. அம்மன் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தினர்.

Update: 2022-09-26 17:55 GMT

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழாவாகும். மகிசாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களை காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். அரக்கனை ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு அழித்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது உண்டு. மேலும் அம்மன் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடைபெறும். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள், கால்நடைகள், இயற்கை சார்ந்தவை மற்றும் ஆன்மிகம் தொடர்பான பொம்மைகள் வைத்து 9 நாட்கள் மாலை நேரத்திற்கு பின் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு தொடங்கியது. வருகிற 4-ந் தேதி ஆயுத பூஜையுடன் விழா நிறைவடைகிறது. வருகிற 5-ந் தேதி விஜயதசமி பண்டிகையையும் கொண்டாடப்பட உள்ளது.

திரளான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி மனோன்மணி அம்மன் கோவில், அரியநாச்சியம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் கொலு வழிபாடு பூஜைகளும் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வரை நவராத்திரி விழா பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது உண்டு.

இதேபோல மாவட்டத்தில் உள்ள வீடுகளிலும் கொலு வைத்து வழிபாடு தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்