தேசிய மக்கள் நீதிமன்றம்: 5 ஆயிரத்து 301 வழக்குகளுக்கு சமரச தீர்வு

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 301 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 22:37 GMT

மக்கள் நீதிமன்றம்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் வரவேற்றார்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கலைமதி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணும் போது இருதரப்பினர்களுக்கிடையே உள்ள மனஸ்தாபங்கள் நீங்கி, உறவு முறையில் முறிவுகள் இல்லாமல் வழக்குகளுக்கு தீர்வு காண்பதே இதன் சிறப்பு ஆகும். வழக்கு தரப்பினர்களுக்கு மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பையும் மக்கள் நீதிமன்றம் கொடுப்பதால், அப்படிப்பட்ட வாய்ப்புள்ள மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமரச தீர்வு

வாகன விபத்தில் வழக்கில் சமரச தீர்வு எட்டப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி வழங்கினார். இதில் நீதிபதிகள் தாண்டவன், கிறிஸ்டல் பபிதா, வக்கீல்கள் சங்க தலைவர் எம்.முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 5 ஆயிரத்து 301 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.21 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரத்து 181-க்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்