மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி. கல்லூரி விடுதியில் தங்கியபடி அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி சுகிர்தா கல்லூரி விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். உடலை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் சுகிர்தா உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் (63), சீனியர் மாணவர் ஹரீஷ் மற்றும் சீனியர் மாணவி பிரீத்தி ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடிதத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் பரமசிவம் மீது மாணவி சுகிர்தா குற்றம்சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பேராசிரியர் பரமசிவமை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும் அகில இந்திய மருத்துவ ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரியிடமும், தமிழக மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடமும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.
அதே சமயம் குலசேகரம் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த மாணவி தற்கொலை வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் குலசேகரம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவராஜ், நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் போலீசார் நேற்று இந்த வழக்கின் விசாரணையை தொடங்கினர்.
முதல் கட்டமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட மாணவியுடன் படித்த சக மாணவ, மாணவிகள், கல்லூரி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மதியத்தில் இருந்து நேற்று இரவு வரை தொடர்ந்தது.