"தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை - 0" - கனிமொழி எம்.பி.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதை, காலம் காலமாகத் தி.மு.க. எதிர்த்து வருவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.;

கோப்புப்படம்
சென்னை,
தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் வளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா..? அல்லது பா.ஜ.க. கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா..?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்..? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.