திருவள்ளூர்: திடீரென பற்றி எரிந்த கழிவு நீர் கால்வாய்
திருவள்ளூரில் கழிவு நீர் கால்வாயை சோதனை செய்த போது, திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 18 ஆயிரத்து 950 குடியிருப்புகள், 87, 000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்படிருந்தது. கடந்த சில தினங்களாக முக்கிய சாலைகளில் கால்வாய்களில் அடைப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் நகராட்சி ஊழியர்கள் அந்த கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த கால்வாய் மூடியை திறந்த போது துர்நாற்றத்தை கண்ட நகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக அனைத்து மூடியையும் அடைத்துவிட்டு ஒரு கால்வாயில் மட்டும் வத்திக் குச்சி மூலம் தீ வைத்து பார்த்தனர்.
அப்போது திடீரென கேஸ்சில் இருந்து வரும் தீயை போல தீ பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் ஆய்வு நடத்தினர். தற்போது இந்த பிரச்சினையை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.