"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.;

Update:2025-03-27 15:08 IST
"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருக்கவே தகுதியற்றவர். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான். அ.தி.மு.க.வை ஒருபோதும் எதிரிகளிடம் அடமானம் வைக்கமாட்டோம். தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், "தமிழகத்தில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்