வாய்மேடு:
துளசியாப்பட்டினத்தில் ரூ.18 கோடியில் அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவ்வை பெருவிழா
வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் உள்ள அவ்வையார் மற்றும் விஸ்வநாத சுவாமி கோவில் வளாகத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அவ்வை பெருவிழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் வரவேற்றார்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவ்வையார் பற்றிய வரலாற்று கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.
ரூ.18 கோடியில் மணிமண்டபம்
விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசிய போது கூறியதாவது:-
தமிழ் பெரும் புலவர்கள் அடிப்படையில் அவ்வையாருக்கு சிறப்பான இடம் உண்டு. இவர் பெண்பா புலவர்களின் தலையானவர். அரிய கருத்துகளை எளிய நடையில் அமைத்து பாக்களை இயற்றி பைந்தமிழை வளப்படுத்தியவர்.
அவ்வையார் சிறந்த சிவபக்தர் என்றும்,, விநாயகரை போற்றி வழிபட்டார் என்றும் கூறுப்படுகிறது.அவ்வையார் பெண்மைக்கு பெருமை சேர்க்கும் கவியரசியாக திகழ்ந்தார்.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க துளசியாப்பட்டினத்தில் ரூ.18.05 கோடி மதிப்பீட்டில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.
பட்டிமன்றம்
அவ்வை விழாவில் வரும் காலங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டிமன்றம், புத்தக விற்பனைக் கூடங்கள், விளையாட்டு கூடங்கள், அரசின் நல திட்டங்கள் வெளிப்படுத்துவது போன்று சிறப்பாக நடத்தவும், அவ்வையார் கோவில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் முருகையன், அண்ணாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.