நான் அரசியல் சூப்பர் ஸ்டார் - சீமான்
நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நானும், ரஜினிகாந்தும் இரண்டரை மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பற்றி நானும் சொல்ல வேண்டியதில்லை; அவரும் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதால் சங்கி ஆகிவிட்டோம் என்றால், வருடத்திற்கு இரண்டு முறை அவரை வைத்து படம் எடுத்து கோடி கணக்கில் சம்பாதித்த நீங்கள் யார்?. உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பக்கத்தில் வைத்து கொள்கிறீர்கள் அப்போது நீங்கள் யார்?. நான் சந்தித்து பேசியதும் கதறுகிறீர்கள்.
ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். ரெண்டு ஸ்டாரும் இணைஞ்சதும்... பயந்துட்டான். எனக்கு காவியை போட்டு சங்கியாக்க பார்க்கிறார்கள்; எனக்கு எந்த உடை வேண்டுமானாலும் போடலாம்; ஆனால் அது எனக்கு பொருத்தமாக இருக்காது; அசிங்கமானதை நான் வெறுக்கிறேன். நான் இல்லை என்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம், எட்டு வழிச்சாலை வந்து இருக்கும்.
கங்கை கொண்டோம்; கடாரம் கொண்டோம் என்பது சரிதான். ஆனால், காவிரியில் கொஞ்சம் தண்ணீர் கொள்ள முடியவில்லை. இது பெரும் அவலம். மன்னராட்சி காலத்தில் என்ன நடந்ததோ, மக்களாட்சி காலத்தில் அதுதான் நடக்கிறது. தமிழ் மக்கள் விழித்து கொள்ளவில்லை என்றால், இந்த இனத்தை பாதுகாக்க இனி எவனும் வர மாட்டான். நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும். அதில் நமது லட்சியத்தை மரமாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.