பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் பேச்சு

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் அல்ல என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-01-08 12:39 IST

சென்னை,

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் பேசினர். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று பேசி மலிவான அரசியல் செய்யக்கூடாது. அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால் நடத்தப்பட்டது. அது தொடர்பாக அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் சி.பி.ஐ.யிடம் போனபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவே 12 நாட்கள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் மீது களங்கம் ஏற்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது. உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி அவர்களின் கல்வியை கெடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் பேட்ஜ் அணிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட சார்கள் குறித்த கேள்வியை அ.தி.மு.க.வை பார்த்து என்னால் கேட்க முடியும். பா.ஜ.க.வின் கதையை சொல்லி பேரவையின் மாண்பை குலைக்க விரும்பவில்லை. எந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் அல்ல; தி.மு.க. ஆதரவாளர் மட்டுமே. ஞானசேகரன் தி.மு.க. ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். அமைச்சருடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்; ஆனால் அவர் தி.மு.க.வில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்