டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக வழக்கு: பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை கோர்ட்டு உத்தரவு
டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக பதிவான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக பதிவான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
பா.ஜ.க. செயலாளர் கைது
தமிழக பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரிக்க அனுமதி கேட்டு மனு
இந்தநிலையில் அவரிடம் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல தனக்கு ஜாமீன் கேட்டு எஸ்.ஜி.சூர்யா சார்பில் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மாஜிஸ்திரேட்டு டீலாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது சிறையில் இருந்து எஸ்.ஜி.சூர்யா அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது குறித்துதான் கடந்த 7-ந்தேதி டுவிட்டரில் எஸ்.ஜி.சூர்யா கருத்து பதிவிட்டார். ஆனால் தவறுதலாக மதுரை என பதிவிட்டதை சிறிது நேரத்திலேயே திருத்திவிட்டார். ஆனால் போலீசார் அவர் மீது பொய் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவரை கைது செய்யும்போது சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை போலீசார் பின்பற்றவில்லை. இது சட்டவிரோதம், என வாதாடினார்.
நிபந்தனை ஜாமீன்
போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவர் மதுரையில் தங்கியிருந்து 30 நாட்களுக்கு காலையும், மாலையும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.