ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நிலத்தகராறில் விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நிலத்தகராறில் விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நிலத்தகராறு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65), விவசாயி. இவருடைய மகள் கல்பனாவுக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் சின்னபையன் (76). இவருக்கும், கல்பனாவுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை ஓமலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நாராயணன் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னபையன், அவருடைய மனைவி கமலா (70), மகன் வடிவேல் (49), மருமகள் புஷ்பவள்ளி (39) ஆகியோர் வந்தனர். அவர்கள் நிலம் தொடர்பாக நாராயணனிடம் தகராறு செய்தனர்.
ஆயுள் தண்டனை
தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சின்னபையன் உள்பட 4 பேரும் சேர்ந்து நாராயணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னபையன், கமலா, வடிவேல், புஷ்பவள்ளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் சின்னபையன் இறந்து விட்டார். இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கமலா, வடிவேல், புஷ்பவள்ளி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார்.