பெருந்துறை அருகே நடைபாதை மேம்பாலம் இல்லாத 4 ரெயில் நிலையங்கள்; உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
பெருந்துறை அருகே நடைபாதை மேம்பாலம் இல்லாத 4 ரெயில் நிலையங்கள்; உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
உலகின் 2-வது பெரிய பொது நிறுவனம் இந்திய ரெயில்வே துறை. அதற்கென விதிக்கப்பட்டு இருக்கும் சட்டங்கள் தனி. மாநில நெடுஞ்சாலையிலோ, பொது இடங்களிலோ ஒரு இரும்பு துண்டு கிடந்தால் அதை ஓடிச்சென்று எடுத்து எடைக்கு போட்டுவிடுவோம். ஆனால் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களிலும், தண்டவாள பகுதியிலும் டன் டன்னாக இரும்பு கிடக்கிறது. அதை யாரும் தொடுவதில்லை. ஏன்? உடனடியாக தண்டனை கிடைக்கும் என்பதால். இந்த சட்டமே இத்தனை ஆண்டு காலம் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த உதவியாக உள்ளது. ஆனால் இந்த சட்டம் ரெயில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தருகிறதா? என்றால் பலர் இல்லை என்றே சொல்வார்கள்.
சிறை தண்டனை
சமீபத்தில் தெற்கு ெரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ெரயில்வே விதி 147-வது பிரிவின் படி ெரயில் பாதையை கடக்க கூடாது என்றும், சுரங்க பாதை அல்லது மேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் 4 ெரயில் நிலையங்களில் நடைபாதை மேம்பாலங்கள் இல்லாததால் பயணிகள் உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள்.
இவ்வாறு ெரயில் தண்டவாளங்களை கடந்து பொதுமக்கள் எதிர்பாராத விதமாக அடிக்கடி ெரயில் மோதி இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
திருப்பூர் வேலைக்கு...
ஈரோடு ெரயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் மார்க்கத்தில் 6-வது கி.மீ தூரத்தில் தொட்டிபாளையம் ெரயில் நிலையமும், 14-வது கி.மீ தூரத்தில் பெருந்துறை ெரயில் நிலையமும், 19-வது கி.மீ தூரத்தில் ஈங்கூர் ெரயில் நிலையமும், 27-வது கி.மீ தூரத்தில் விஜயமங்கலம் ெரயில் நிலையமும் உள்ளது.
இந்த 4 ெரயில் நிலையங்களிலும் நடைபாதை மேம்பாலங்கள் கிடையாது. இதில் பெருந்துறை ஆர்.எஸ், ஈங்கூர் மற்றும் விஜயமங்கலம் ஆகிய 3 ெரயில் நிலையங்களில் இருந்து தினமும் பயணிகள் ெரயில்கள் மூலம் அதிக அளவில் தொழிலாளர்கள் திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
குறைந்த கட்டணம்
இவர்களுக்கு வசதியாக ஈரோட்டில் இருந்து தினமும் காலையில் 7.25 மணிக்கு ஈரோடு-பாலக்காடு பயணிகள் ெரயிலும், காலை 8 மணிக்கு ஈரோடு-கோவை பயணிகள் ெரயிலும் செல்கிறது. மேலும் மாலை 3.05 மணிக்கு சேலம்-கோவை பயணிகள் ெரயிலும் செல்கிறது.
இவர்கள் பணி முடிந்து மாலையில் இதே ெரயில்களில் திரும்ப வருகின்றனர். இந்த ெரயில்களில் பஸ் கட்டணத்தை விட மிக குறைவான கட்டணம் என்பதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தவிர கோவை, பாலக்காடு செல்லும் பயணிகளும் இந்த பயணிகள் ெரயில்களில் அதிக அளவில் செல்கிறார்கள். அதனால் இந்த ெரயில் நிலையங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எங்கே நிற்பது?
இதுகுறித்து தினமும் ஈங்கூர் ெரயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்திற்கு சென்று வரும் உச்சனகவுண்டன்புதூரை சேர்ந்த தங்கமுத்து (வயது 62) என்பவர் கூறியதாவது:-
ஈங்கூர் வழியாக தினமும் காலை 7.40 மணிக்கு செல்லும் ெரயிலில் நாங்கள் திருப்பூர் செல்வோம். அதனால் நாங்கள் அவசர, அவசரமாக வீட்டில் இருந்து புறப்பட்டு ெரயில் நிலையம் வருவோம். ஆனால் சில சமயங்களில் எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கு வழி விடுவதற்காக சரக்கு ெரயில்களை முதலாவது தண்டவாள பாதையில் நிறுத்தி விடுவார்கள். இதனை தாண்டி நாங்கள் 4-வது தண்டவாள பாதையில் திருப்பூர் செல்லும் ெரயிலை பிடிக்க சரக்கு ெரயிலின் அடியில் புகுந்து செல்வோம். இதில் டேங்கர் ெரயிலாக இருந்தால் அதன் அடியில் நுழையவே முடியாது. இதையெல்லாம் கடந்து செல்லும் போது 2-வது அல்லது 3-வது தண்டவாள பாதை வழியாக ஏதாவது எக்ஸ்பிரஸ் ெரயில் வந்து விட்டால் நாங்கள் எங்கே நிற்பது? என தெரியாமல் தவிப்போம். அதனால் உடனடியாக இந்த ெரயில் நிலையங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடைபாதை மேம்பாலம்
சென்னிமலை அருகே பெரியகாட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் எஸ்.பிரியதர்ஷினி கூறியதாவது:-
நாங்கள் ஒரு முறை குடும்பத்துடன் கோவை செல்வதற்காக ஈங்கூர் ெரயில் நிலையத்திற்கு சென்றோம். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில் நாங்கள் தண்டவாளங்களை கடந்து மறு பகுதியில் உள்ள நடைமேடைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டோம். நடைபாதை மேம்பாலம் இல்லாத ெரயில் நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் இதுபோன்ற நிலைதான் ஏற்படுகிறது. நடைமேடைக்கு செல்ல தண்டவாளங்களையும், அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள ஜல்லி கற்களையும் கடந்து செல்வது மிகப்பெரிய சிரமம். தண்டவாள பகுதியில் இருந்து நடைமேடை 4 அடி உயரத்தில் இருக்கிறது. இதில் வயதானோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் ஏற முடிவதில்லை. அதனால் ெரயில்வே நிர்வாகம் இதுபோன்ற ெரயில் நிலையங்களில் உடனடியாக நடைபாதை மேம்பாலங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு இவர் கூறினார்.
கை கொடுக்கவேண்டும்
பெருந்துறையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சவுந்தர்யா செந்தில் என்பவர் கூறும்போது,
எங்கள் வீட்டில் எனது கணவரும், மாமாவும் 4 வருடங்கள் தொடர்ந்து அலுவலக பணிக்காக ஈங்கூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ெரயிலில் சென்று வந்தனர். டிக்கெட் கவுண்ட்டர் உள்ள நடைமேடையில் இருந்து மறுமுனையில் உள்ள நடைமேடைக்கு செல்ல 4 தண்டவாள பாதைகளை கடந்து செல்வார்கள். அப்போது ஒருமுறை எனது மாமா தவறி விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இப்படி பல பேர் தவறி விழுந்துள்ளனர். வயதானோர் தனியாக செல்லும் போது யாராவது கை கொடுத்து உதவினால் மட்டுமே கீழே இறங்கி மேலே ஏற முடியும். அதனால் உடனடியாக நடைபாதை மேம்பாலம் அமைப்பதே தீர்வாகும் என்றார்.
நடவடிக்கை
பெருந்துறை ஆர்.எஸ் அருகே கொம்மக்கோவிலை சேர்ந்த சென்னிமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆர்.செல்வராஜ் கூறும்போது, எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பெருந்துறை ெரயில் நிலையத்தில் இருந்து அதிக அளவில் திருப்பூர், கோவைக்கு சென்று வருகின்றனர். ஈரோட்டுக்கும், திருப்பூருக்கும் இடையே உள்ள ஊத்துக்குளி ெரயில் நிலையத்தில் மட்டும் நடைபாதை மேம்பாலம் உள்ளது. ஆனால் தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர் மற்றும் விஜயமங்கலம் ஆகிய 4 ெரயில் நிலையங்களிலும் நடைபாதை மேம்பாலங்கள் கிடையாது. இரட்டை ெரயில் பாதையை கொண்ட ஈரோடு-கோவை மார்க்கத்தில் பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம் ஆகிய ெரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கு வழி விடுவதற்காக கூடுதலாக 2 ெரயில் பாதைகளுடன் 4 பாதைகள் இருக்கும். தொட்டிபாளையத்தில் 3 பாதைகள் உள்ளன. இந்த கூடுதல் பாதைகளில் சரக்கு ெரயில்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதனால் சரக்கு ெரயிலுக்கு அடியில் புகுந்து மறு பகுதியில் உள்ள நடைமேடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். பெண்கள் மற்றும் வயதானோர் தண்டவாளத்தை கடக்கும் போது ெரயில் வந்து விட்டால் வேகமாக ஓடி சென்று நடைமேடையில் ஏற முயற்சிப்பார்கள். அப்போது கால் தவறி கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனால் ெரயில் பயணிகளுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறிய ெரயில் நிலையங்களிலும் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க ெரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.