கடைகள், வர்த்தக நிறுவனங்களில்ஊழியர்களுக்குஇருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.;
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இருக்கை வசதி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான சட்ட திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த இடத்தில் பணி செய்யும் போதும் அல்லது ஓய்வின் போதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமருவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால் பணியாளர்களின் கால் விரல்களில் ஏற்படும் அசவுகரியங்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
ஆகையால் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இந்த சட்ட திருத்தத்தின்படி பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காத அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மீதும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.