வினாத்தாள்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2023-03-07 21:22 GMT

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் 105 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வையும், 22 ஆயிரத்து 442 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர்.தனித்தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் நேற்று அதிகாலை வந்தடைந்தது. இந்த வினாத்தாள்களை் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பார்வையிட்டார்.

பலத்த பாதுகாப்பு

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைக்கப்பட்டு உள்ள வினாத்தாள்களின் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அனைத்து பாட வினாத்தாள்கள், பிளஸ்-1 தேர்வுக்கான 3 பாட வினாத்தாள்கள் வந்துவிட்டதாகவும், மீதமுள்ள பாடத்துக்கான வினாத்தாள்களும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் விரைவில் வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்