வில்லிவாக்கத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து சித்ரவதை - பள்ளி தாளாளர் கைது
மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சரண்யா(வயது 33). இவருடைய 7 வயது மகன், சற்று பேச்சு குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஆவான். தனது மகனை, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சி(42), மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்ரவதை செய்ததாக சரண்யாவுக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பள்ளி தாளாளர் மீனாட்சியிடம் கேட்டார்.
அதற்கு அவர், சரண்யாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி சரண்யா, வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மாற்றுத்திறனாளி சிறுவனை கை, கால்களை கட்டி சித்ரவதை செய்ததுடன், அதனை தட்டிக்கேட்ட சரண்யாவை கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதியானது.
இதையடுத்து போலீசார், பள்ளி தாளாளர் மீனாட்சி மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைதான மீனாட்சி, பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.