15 நிமிடத்தில் சென்னை - பெங்களூரு: 'ஹைப்பர் லூப்' சோதனை வெற்றி - மத்திய மந்திரி பாராட்டு
‘ஹைப்பர் லூப்’ தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.;

கோப்புப்படம்
சென்னை,
ரெயிலில் நீண்ட தூரத்தை அதிவேகமாக கடக்க 'ஹைப்பர் லூப்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறையை சென்னையை அடுத்த தையூரில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் அண்மையில் உருவாக்கி இருந்தனர். இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் சென்னை வந்திருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பிரதமரின் முயற்சியால் அதிக மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. மின்னணு தொழில் துறையை தமிழகத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக புதிய திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் நீண்ட தூரங்களுக்கிடையே அதி வேகமாக பயணம் செய்யக்கூடிய 'ஹைப்பர் லூப்' என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரெயில்களை உருவாக்கி இருக்கின்றனர். அது தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.
ரெயில்வே துறையில் 'ஹைப்பர் லூப்' மிக முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சி. சென்னை ஐ.ஐ.டி. முன்னெடுத்து உள்ள இந்த திட்டத்துக்கு இந்திய ரெயில்வே உறுதுணையாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 15 நிமிடத்தில், சீறிப்பாய தயாராகும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் முதல் கட்ட சோதனையை பார்த்து வியந்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டினார்.
முன்னதாக சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு வாரத்துக்கு 3 ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை மனு மத்திய மந்திரியிடம் தரப்பட்டது. அந்த மனுவை வாங்கிய மத்திய மந்திரி, 15 நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.