டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி
தமிழில் பெயர்ப்பலகை மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக நடப்பதாக சீமான் கூறியுள்ளார்.;

சென்னை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்த்திவிட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ரூ.4 லட்சம் கோடி கடனை ஏற்றியிருக்கிறார்கள். இந்த கடனை வாங்கி எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க திட்டங்களை நிறைவேற்றிவிட்டேன் என சொல்ல முடியுமா?, சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டு வந்து இருக்கிறார்களா?, சாலை வசதிகள் செய்து இருக்கிறார்களா?. தெருவெங்கும் சாராய கடைகளை திறந்து வைத்து, நாட்டு மக்களின் நலன், நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு என்று பேசுவது எந்தவிதத்தில் நியாயம். 'ரூ' என்று மாற்றியதால் இந்தி ஒழிந்து தமிழ் மீண்டுவிட்டதா?. தமிழ் பேசவே வரவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள்.
தமிழில் பெயர்ப்பலகை மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக நடக்கிறது. அதை முறையாக செயல்படுத்தவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என வெற்று முழக்கம் இடுகிறார்கள். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் அதுவும் வெற்று முழக்கம். இதெல்லாம் வெற்று கூச்சாலாகிவிட்டது. பா.ஜனதா ஆளும் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி மராட்டியத்தில்தான் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார். கர்நாடகாவிலும் கன்னடம் மட்டும்தான் என சொல்கிறார். ஆனால் இங்கு அப்படியா இருக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலேயே அவரவர் மாநில மொழிகளில் படிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். 2026 தேர்தலுக்கான பணிகளை நாங்கள் எப்போதோ தொடங்கிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.