கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-03-16 07:53 IST
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

கோப்புப்படம் 

மதுரை,

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி செயலாளர், மதுரையில் உள்ள ஒரு பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி செயலாளர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2016-2017, 2018-2019ம் கல்வி ஆண்டுகளில் எங்களது கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை அனுப்புமாறு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த ஆணையம் சார்பில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விவரங்களை கேட்பதற்கு அதிகாரம் இல்லை. எனவே சிறுபான்மை ஆணைய உறுப்பினர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழக சிறுபான்மை ஆணைய சட்டப்பிரிவு 8(1)-ல், நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது, அரசியலமைப்பு சட்டப்படி சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலும் நடைபெறாமல் கண்காணிப்பது மட்டுமே அந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இந்த இரண்டையும் தவிர்த்து, மூன்றாவதாக கல்லூரி மாணவர்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கப்பட்ட விவரத்தை அந்த ஆணையம் கேட்டு உள்ளது. மாணவர்கள் இடஒதுக்கீடு விவரத்தை கேட்பதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே மனுதாரர்களுக்கு, சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்