பசுமை தொழில் நிறுவனங்கள் மேம்பாடு திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்
பசுமை தொழில் நிறுவனங்கள் மேம்பாடு திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை தொழில் நிறுவனங்கள்
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சுய உதவிக்குழுக்களின் மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும், 25 பசுமைத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பசுமைத் தொழில் நிறுவனங்களை உருவாக்கி அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் பசுமைத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி, அவர்கள் நிலைத்த நீடித்த வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்வதற்கான முயற்சிகளை தொடங்க உள்ளது.
பசுமைத் தொழில் நிறுவன மாதிரிகளை கட்டமைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை முன்னெடுத்தல், பசுமை செயல்பாடுகள் வழியாக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, லாபத்துடன் கூடிய உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்படுத்துதல், தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விண்ணப்பிக்கலாம்
பசுமைத்தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில் முனைவோர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தொழில் நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைக்கு உட்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு வகை தொழில் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். திட்ட காலம் ஓராண்டு மற்றும் திட்டத்திற்கான மதிப்பு ஒரு நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் ஆகும்.
எனவே, இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள பசுமைத் தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 15-ந் தேதி ஆகும். சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமைத்தொழில் நிறுவன விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், அறை எண் 215, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 15-ந் தேதியன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு 04329-228505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.