அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்: மாநில தலைவர் மணிமேகலை பேட்டி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை கூறினார்.

Update: 2023-04-15 18:42 GMT

பயிலரங்கம்

கரூரில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல சங்க நிர்வாகிகளுக்கான இயக்க பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சகிலா முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கருத்துரை வழங்கினார். இதில் கரூர், திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வோம், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவோம், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தை வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை அளித்தார்.

ஆனால் 2 ஆண்டுகள் முடிந்துபிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சரண்டர் ஒப்படைப்பு பணப்பலனை பறித்து தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்தது, அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஆசிரியர், அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள்

எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் இருக்கக்கூடிய காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மட்டும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்