அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளன

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-10-16 19:45 GMT

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு

சேலம் இரும்பாலை அருகே அரசு மருந்து கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் இல்லை. மருத்துவ கிடங்குகள் மூடப்படும் நிலை உள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளே மருந்து, மாத்திரைகள் வாங்கி வரவேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார். இது உண்மை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

இருப்பு உள்ளன

சேலம் மாவட்டத்தில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான அளவு மருந்துகள் இருப்பு உள்ளன. மாவட்ட மருந்து கிடங்கில் தற்போது 600-க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் 4 மாதத்திற்கு தேவையான அளவு உள்ளன. ஒரு சில மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டால், டாக்டர்களே வாங்கிக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து கிடங்குகள் இல்லாத மாவட்டங்களில் மருந்து கிடங்குள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி தற்போது தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் புதிதாக மருந்து கிடங்குகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகள் மீறப்பட்டு உள்ளதா? என்பது குறித்து 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே விதிமீறல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வருவாய் அலுவலர் மேனகா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்